Sunday, 25 September 2011

அன்பு உள்ளங்களுக்கு நன்றி

அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே,
தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தலில் சங்கச் சீரமைப்பு அணிக்கு அமோக ஆதரவளித்த உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி.
தலைவர் திரு கிருஷ்ணமணி, துணைத்தலைவர் திருமதி ரமாமணி சுந்தர், பொதுச் செயலர் திரு முகுந்தன், இணைச்செயலர்கள் திரு ராகவன், திருமதி கௌரி இளங்கோவன், பொருளாளர் திரு அறிவழகன், இணைப்பொருளாளர் திரு நரசிம்மமூர்த்தி ஆகிய அனைவரின் வெற்றியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
செயற்குழு உறுப்பினர்களிலும் நமது அணியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறும் நிலையில் இருக்க்கிறார்கள்.
வாக்கு விவரங்களை விவரமாக பின்னர் வலைப்பூவில் வெளியிடுவோம்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
வலைப்பூவில் நாளை விவரங்களைப் பார்க்க வேண்டுகிறோம்.

உங்கள் கருத்தறிந்து, மனமறிந்து சங்கச் செயல்பாடுகளை சீரமைப்போம்.
மீண்டும் நன்றி -
உங்கள் அன்புள்ள
சங்கச் சீரமைப்பு அணி

Saturday, 24 September 2011

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை



        பேரன்பு கொண்டவரே!
                      எனைப் பெற்ற தாய்மாரே!
                                உற்ற நட்பு முறையீரே!
                                         உளம் நிறையும் உடன் பிறப்பே!        

      நீங்கள் இட்டபணி அத்தனையும் இமைப்பொழுதில் முடிப்பதற்குக்
      காத்திருக்கும் என் வாழ்வை நீர் அறிவீர் ஊர் அறியும்
      தலை நகரத் தமிழர் மனம் மகிழ்ச்சியிலே திளைக்கும் வகை 
      தரமான பல நிகழ்ச்சி அளித்த எனை நன்கறிவீர்

      வான்புகழ் வள்ளுவரை வணங்கிட வசதியாய்ச் - சங்க  
      வாயிலிலே வைத்தவன் நான் வணங்கி உமை வேண்டுகிறேன்

      ஈவிரக்கம் ஏதுமற்றார் என் மீது கணைதொடுத்து
      வானுயரம் வசை சொன்னார்; பழிச் சொற்கள் பல உரைத்தார்

      கை எழுத்து மோசடி செய்தேன் என்றார்
      கல்விக் கழகத்தில் கலகம் செய்தேன் என்றார்
      அத்தனையும் பித்தலாட்டம்; அபாண்டமாய்ப் பொய்யுரைகள்
      அனைவருமே அறிவீர்கள் – என்றாலும் பதிலுரைப்பேன்

      வான் மழையாய் கார்முகிலாய் காமதேனுவாய் கற்பகத் தருவாய்
      நான் கேட்டால் துணைபுரிய பல நூறாய் நீர் இருக்க
      இல்லாதோர் கையொப்பம் எனக்கென்றும் தேவையுண்டோ?
      பொல்லாதோர் புனைசுருட்டை அறிந்திடுவீர் எனைக் காப்பீர்

     
      இரண்டாண்டு பணி புரிந்தும் ஊதியம் ஏதுமின்றி
      வாடி நின்ற ஆசிரியர் வாழ்க்கையிலே உவகையுற
      முதல்வரை நான் சந்தித்தேன் ஆசிரியர் துயர் முடித்தேன்
      அது பிழையா? என் தவறா? பிதற்றல் மொழி நீர் அறிவீர்

      கல்விக் கழகத்தின் நிதி நிலைமை சீரடைய
      கச்சிதமாய் அவர்பணிகள் மேன்மையுற வலிமையுற
      இலட்சம் ஆறு பெற்றளித்த பெருமைக்கு உரியவன் நான்
      இதை மறைத்துப் பொய்யுரைப்பார் கதை அறிவீர் எனைப் புரிவீர்

      கர்நாடக சங்கீதம் கச்சிதமாய் களைகட்ட
      இலட்சம் இருபத்தைந்து கிடைப்பதற்கு வழிவகுத்தேன்

      தனி நபராய் எனை நாடி வந்தவர்க்கும் நாள் தோறும்
      தட்டாமல் உதவுகிறேன் தலை நகர் முற்றும் அறியும்

      காட்சிக்கு எளியனாய் கடுஞ்சொல்லன் அல்லனாய்
      காலமெலாம் பொதுப் பணிக்கே அர்ப்பணித்து வாழுகிறேன்

      பொல்லாங்கு ஒருவரையும் சொன்னதும் இல்லை
      பொய்யுரைத்து புனைசுருட்டு பேசியதும் இல்லை
      எல்லாம் தெரிந்தவன் நான் என்றதும் இல்லை
      எவர்மனமும் நோகும்விதம் பேசுவதும் இல்லை.

      நல்லவர்கள் சொல்லும்மொழி அக்கறையாய் செவிமடுப்பேன்
      நாடிவரும் அனைவருக்கும் உதவிடநான் முனைந்துழைப்பேன்.
      பெரியவரின் பதம் பணிவேன், தோழருக்குத் தோள்கொடுப்பேன்
      தொண்டருக்குத் தொண்டனாவேன், துவளாமல் பணிநிறைப்பேன்

      சங்கத்தைச் சீரமைக்க சால பெரும் நிலை அடைய
      சான்றோரும் ஆன்றோரும் காட்டுகிற நல் வழியில்
      துடிப்போடு பணியாற்ற உம் ஆணை வேண்டுகிறோம்
      தூயவரே வாக்களிப்பீர் உம் வீட்டுப் பிள்ளைகள் யாம்


சங்கச் சீரமைப்பு அணிக்கே வாக்களிப்பீர்
சங்கம் சீர்பெறவே உதவிக்கரம் கொடுப்பீர்

                                                                                                                                                                          அன்புடன்
                                                                                    இராஜ கோபாலன் முகுந்தன்
                                                                                                                 உங்கள் வீட்டுப் பிள்ளை

விஷக்கடிகளுக்கு முறிவு


திரு கி. பென்னேஸ்வரன் அவர்கள் தனது வலைதளத்தில் நமது வலைப்பூ குறித்து எழுதியிருக்கிறார். இதில் பல விஷயங்களை அவரே ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுவினர்மர்மமான முறையில் இரா. முகுந்தன் மற்றும் கேவிகே பெருமாள் ஆகியோரின் இடைநீக்கத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள் என்றால், செயற்குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் போர்க்கொடி அல்லவா தூக்கியிருக்க வேண்டும்?! இந்த செயற்குழு முக்கியஸ்தர்களின் ஆதரவு எனக்கு வேண்டாம் என்றல்லவா இவர் கூறியிருக்க வேண்டும்?! தேவைக்கேற்ப அடர்த்தியான மௌனம் காப்பதும், தேவைக்கேற்ப போற்றிப் புகழ்வதும்தானே இவருக்கு வழக்கம்?!

இவரது அணியில் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்கள் என்றால், திரு பார்த்தசாரதியின் பிரசுரம் எப்படி வெளியானது... அணியில் அவர் தனிஆவர்த்தனம் வாசிக்கத் துவங்கி விட்டாரா...?!

இவர் குறிப்பிட்டுள்ள இந்த மொட்டை வலைப்பூ -  சங்கச்சீரமைப்பு அணியின் வலைப்பூ என்றுதான் பெயர் தாங்கி வருகிறது. சங்கச் சீரமைப்பு அணியின் வேட்பாளர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும் - கூட்டு முயற்சியில் வெளியாகும் வலைப்பூவில் தனிநபர்கள் முக்கியமல்ல. பிரசுரங்கள் வெளியாகும்போது பெயர்களுடன்தான் வெளிவரும், கவலை வேண்டாம்.

இந்த வலைப்பூ அமைதியான முகத்தைக்காட்டி முகிழ்த்தது என்று இவர் குறிப்பிட்டதற்கு நன்றி. எதிர்மறையான பிரச்சாரமாக நேற்று வரை எதுவும் இதில் எழுதப்படவில்லை என்பதை அவரும் அறிந்திருப்பார். அவரது வலதுகரமான திரு பார்த்தசாரதி வெளியிட்ட பிரச்சாரத்திற்குப் பிறகுதானே பதிலடி கொடுக்கும் தேவை எமக்கு வந்தது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள இவர் மறுப்பது ஏன்? தனது அணியின் பார்த்தசாரதியை அல்லவா அவர் முதலில் குற்றம் சாட்ட வேண்டும்?!

நமது வலைப்பூவில் வெளிவந்த பதிவுகளைப் பற்றிப் பேசுவதானால் அதில் உள்ள விஷயங்களைப் பற்றித்தானே கருத்துக்கூற வேண்டும்... அரைகுறை அறிவுடன் அபத்தமாக எழுதப்பட்டுள்ள பதிவுகள் என்று அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு இவர் அறிவுஜீவித்தனமாகப் பதிலளித்திருக்கலாமே... மொத்தத்தில் இவர் ஏன் எல்லாரையும் எல்லாவற்றையும் மதிப்பீடு செய்யும் நீதிபதியாகத் தன்னை நியமித்துக் கொள்ளவேண்டும்? மாற்றுக் கருத்துகள் தெரிவிப்பவர்களின் உள்ளக்கிடக்கையையும் அவர்களை உந்தும் சக்திகளையும் ஐயம் திரிபறத் தெரிந்தவர் என்று தம்மை விளம்பரப்படுத்திக்கொள்கிறார்?   

தேர்தல் நேரத்தில் பரபரப்பினை உண்டாக்குவது இவருக்குத்தானே வழக்கம். 2006 தேர்தலில் முகுந்தனை வானளாவப் புகழ்ந்து இவர் வெளியிட்ட அறிக்கையை அவ்வளவு சுலபமாக மறக்க முடியுமா!

வலைப்பதிவில் நாம் ஏற்கெனவே வெளியிட்ட உறுப்பினர் தீர்மானங்கள் சங்கத்தின் நலன் கருதி வைக்கப்பட்டவை என்பதிலும், தேவையானவை என்பதிலும் இவருக்கு மாற்றுக் கருத்து இல்லையாம். அப்படியானால் செயற்குழு இதை பேரவைமுன் வைக்க மறுத்தது தவறு என்று வெளிப்படையாக எழுத வேண்டியதுதானே?! ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விட்டது என்று எதற்கு மழுப்ப வேண்டும்? அந்தக் காரணங்கள் சரியா - தவறா என்று சொல்லக்கூடாதா?! மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் புறக்கணிக்கப்பட்ட உணர்வாலும் காழ்ப்புணர்ச்சியினாலும் செயல்படுகிறார்கள் என்றெல்லாம் ஆய்ந்து ஆய்ந்து காரணங்களைக் கண்டுபிடித்த இவருக்கு செயற்குழு எந்தக் காரணத்தினால் மறுத்து விட்டது என்று கண்டுபிடிக்க அல்லது யூகிக்க முடியவில்லையா? 

மேலே அரைகுறை அறிவு, அபத்தம் என்று இவர் சுட்டிக்காட்டினாரே, அவை இந்தத் தீர்மானங்கள்தான். இவர் மாற்றுக்கருத்து இல்லாமல் ஒப்புக்கொள்கிறார் என்றால் அபத்தம் என்று ஏன் கூற வேண்டும்?! பதிவில் முன்வைத்துள்ள கருத்துகள் சரியா தவறா என்பதைப் பற்றி எழுதாமல் எழுதியவர்களுக்கு என்னென்ன மனநிலை என்று எதற்காக ஆராய வேண்டும்?!

வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் குளறுபடிகள் விஷயங்கள் உறுப்பினர்களுக்குத் தெரியும், பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டவர்களுக்குத் தெரியும். இவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

அது சரி, நடப்புச் செயற்குழுவுக்கு இப்படியா வக்காலத்து வாங்க வேண்டும்? அஞ்சல்களுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த பட்டியலை தவறுதலாக நகல் செய்து முட்டாள்தனமாகக் கொடுத்து விட்டதாம் இந்த செயற்குழு. அப்பாடா... இதைத்தானே நாங்கள் நாகரிகமாக கூறிக்கொண்டிருந்தோம்... இவர் தனக்கே உரிய நாகரிகத்துடன் முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார்.

அது சரி, சங்கத்தில் உறுப்பினர் பதிவேடு என்பது எப்போதும் இருக்க வேண்டிய ஒரு ஆவணம். உறுப்பினர் பட்டியலும் அப்படித்தான். இது தெரியாமல் செயலராக வந்து இவர் என்ன செய்யப்போகிறார் என்று நாம் கேட்க மாட்டோம். ஆனால் அஞ்சலுக்கு வைத்திருந்த பட்டியலை தவறுதலாகக் கொடுத்து விட்டார்கள் என்று செயற்குழுவினர் இதுவரை வெளிப்படுத்தாத ஒரு விளக்கத்தை வழங்கி வக்காலத்து வாங்கி முழுப்பூசணிக்காயை மறைப்பது எந்த வகையில் நியாயம்?!

டி.என். சேஷன், நீதிபதி மோகன், ஏஆர் லட்சுமணன் இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி, மணியன், இந்திராணி மணியன், விட்டல்... இவர்களைப்போன்ற பெரியவர்கள் உள்பட 500 பேருக்கு சங்கத்தின் அஞ்சல்கள் பெறும் தகுதி கிடையாதா?! எதனால் அவர்கள் பெயர்கள் அஞ்சல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன என்றும் கூறியிருக்கலாமே?!

தமிழ்ச் சங்கத்துக்கு உண்மையிலேயே உதவ நினைத்த பார்த்தசாரதி மற்றும் துரை ஆகியோரின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதுதானே இந்தப் பட்டியல்? தில்லியிலேயே வசித்துக் கொண்டிருக்கிற பலரின் பெயர்கள் பட்டியலில் இல்லாமல் ஆக்கியவர்கள் இந்த உதவி செய்தவர்கள்தானே?! இவருக்குக் குருவாக இருக்கிற திரு சௌந்திரராஜன் தில்லியில் இல்லாவிட்டாலும் பெயர் மட்டும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதே அது எப்படி?! இது உதவியா உபத்திரவமா?! பாவம் செயற்குழுவினர்... அவர்களே கொஞ்சம் கஷ்டப்பட்டு பட்டியல் தயாரித்திருந்தால் ஓரளவுக்காவது சரியான பட்டியலை தயாரித்திருக்கலாம். உதவி செய்ய வந்த பெரியவர்கள் இப்படி உளைச்சலில் ஆழ்த்தலாமா?!

பார்த்தசாரதி சங்கத்திற்கு உதவி செய்யச் சென்றார் என்று இவரே ஒப்புக் கொள்கிறார். திரு துரை அவர்களும் அதில் தீவிரமாக இருந்ததை இவர் சுட்டிக்காட்டவில்லை. உறுப்பினர் பட்டியல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியில் ஈடுபடலாமா?! அவர்களை தனது அணியில் இவர் சேர்க்கலாமா?! வலைப்பூவில் நேர்மையைப் பற்றிய தம்பட்டத்துக்குக் குறைவில்லை என்று நம்மைக் குற்றம் சாட்டுகிறவர், தார்மீக அடிப்படையில் பார்த்தசாரதியையும் துரையையும் தன் அணியில் சேர்த்திருக்கவே கூடாதே?!

கிருஷ்ணமணியின் நேர்காணலை வலைப்பூவில் வெளியிட்டதுதான் இவரது கோபத்துக்குக் காரணம். புரிகிறது. 2006 தேர்தலில் கிருஷ்ணமணி அவர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்கும் நோக்கத்துடன் பேட்டியை வெளியிட்டால் அது நியாயம். அப்போது கிருஷ்ணமணி உத்தமர். இப்போது இவருக்கு எதிராகப் போட்டியிட்டால் இவரே வெளியிட்ட பேட்டி முழுக்கப் பொய்யாகி விடும்.

இப்படியே பார்த்தால், 2006 தேர்தலில் முகுந்தனைப் பாராட்டி ஒரு பணிவான வேண்டுகோள் விடுத்தாரே... அதிலிருந்து ஒரு பத்தி இதோ -
இன்று முகுந்தனுக்கு எதிராக நீளும் பல கரங்கள் அவரிடம் பல நிலைகளில் பல இக்கட்டான நேரங்களில் உதவிகளைப் பெற்றுச்சென்ற கரங்கள்தான். பதவி ஆசையும் தேர்தல் நேர அணிமாறல்களும் பலரை நன்றி மறக்கச் செய்துள்ளன என்பது மிகவும் வேதனையான விஷயம்.
(முழு வேண்டுகோளையும் படிக்க விரும்புவோர் கீழே உள்ள படங்களைப் பெரிதுபடித்துவிட்டுத் தொடரலாம்)



ஒரு விஷயத்தைத் இவர் தெளிவுபடுத்தட்டும் - இவர் ஒருவரை நேற்று செயல்வீரர் என்று சொன்னால் அந்த நபரை செயல்வீரர் என்று நாமெல்லாம் நம்ப வேண்டும். இன்று அதே நபரை சீரழிவுக்காரர் என்று சொன்னாலும் நாம் அப்படியே நம்ப வேண்டும். அப்படி நாம் குருட்டுத்தனமாக நம்பாமல் கேள்வி கேட்டால் நாம் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்... நல்ல வாதம்தான் இது!

2006இல் உண்மையான செயல்திறனும் சாதிக்கும் மனோபாவமும் மனத்திடமும் உள்ளவராக இருந்த முகுந்தன், இரண்டே ஆண்டுகளில் அந்த திறமைகளையும் மனத்திடத்தையும் இழந்து விட்டதற்கு யார் காரணம்... அந்த இரண்டு ஆண்டுகளும் கூடவே இருந்தது இவர் அல்லவா?!

கிருஷ்ணமணி அந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்ச் சங்கத்தை தவறாக வழிநடத்தினார் என்று கடிதம் எழுதியதாகக் கூறுகிற இவர், 2008 மத்தி வரை அவர்களைப் போற்றிக்கொண்டுதானே இருந்தார்? 2008 மத்தியில் முகுந்தனுக்கு சிலைகாத்த செம்மல் பட்டம் வழங்கியதாக வடக்கு வாசலில் எழுதினாரே... 2008 மத்தியில் கிருஷ்ணமணிக்கு ஒரு விருது கிடைத்ததற்குப் பாராட்டி மகிழ்ந்தாரே...

இதிலிருந்து தெரிவது என்ன... அந்த இரண்டு ஆண்டுகளில் கிருஷ்ணமணியும் முகுந்தனும் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். உதவி செய்தது வரை அவர்கள் உத்தமர்கள். 2008 மத்தியிலிருந்து ஏதோ காரணங்களுக்காக அவர்களின் உத்தமர் தகுதிகளை இவர் பறித்து விட்டார். அவ்வளவுதான், யாரும் கேட்க முடியாது... கேட்டால் நாம் புறக்கணிக்கப்பட்டவர்கள்...!

சங்க சீரமைப்பு அணியின் தளபதி, தான் பதவி வகித்த காலங்களில் என்ன சாதித்து விட்டார் என்று கேட்டிருக்கிறார் இவர். நல்ல கேள்வி. அந்தத் தளபதி பதவி வகித்த காலத்தில் கடைசி ஆறு மாதங்கள் தவிர, மீதிக்காலம் முழுவதும் ஆலோசனைகள் கூறியதும் துணையாக இருந்ததும், போற்றிப் புகழ்ந்ததும், இவர்தானே.  அதனால்தானே அவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் போனது?! அதனால்தான் அந்தத் தளபதிகள் அரைகுறை அறிவுகொண்டு அபத்தமாக எழுதுவோரின் ஆலோசனைகளே போதும் என்று முடிவு செய்து விட்டார்கள் !.

அன்று மட்டுமா... இன்றைய செயற்குழுவுக்கும் அற்புதமான ஆலோசனைகளை அளித்து வருபவர்கள் இவரும் இவரது அன்புக்குரிய பெரியவர், சட்டஞானம் மிக்க திரு பார்த்தசாரதியும் அல்லவா! இவர்களின் ஆலோசனைகளால்  தமிழ்ச் சங்கம் நாளொரு அறிவிக்கை பொழுதொரு உறுப்பினர் பட்டியல் என்று அசடு வழிந்துகொண்டிருக்கிறது. தனி நபர் தீர்மானங்களை ஆழ்ந்து ஆய்ந்து ஆணித்தரமான காரணங்களோடு நிராகரித்துப் பெருமை தேடிக்கொண்டு இவராலும் பாராட்டப்படுகிறது

2004ல் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தலைவராகிய திரு சௌந்தர்ராஜன், 2006ல் திரு கிருஷ்ணமணி, முகுந்தன் உள்ளிட்ட முழு செயற்குழு, 2009ல் திரு கிருஷ்ண மூர்த்தி, பெருமாள், சத்திய மூர்த்தி பால மூர்த்தி, திருமதி இந்து பாலா உள்ளிட்ட பலர் - இப்படி ஒவ்வொருமுறையும் யாருக்காகவாவது வாக்குக் கேட்டு இவர் வருகிறார். அவர்களது பதவிக்காலம் முடியும் வேளையில் தான் தவறிழைத்து விட்டதாக பகிரங்கப் படுத்துகிறார். 

இன்னும் ஓராண்டு அல்லது ஈராண்டுகள் கழித்து இந்த செயற்குழுவினரையும் தாக்கி, இவர்களுக்கு ஆதரவளித்ததற்காக பாவமன்னிப்புக் கேட்டு இவர் எழுதுவார்.  அதையும் நாம் நம்ப வேண்டும்.

இன்னும் ஒரு விஷயம் - இன்று இவரது அணியில் இருப்பவர்களைப் பற்றிக்கூட நாளை இவரே தூற்றக்கூடும். அதைத் தாங்கிக்கொள்ள அவர்கள் இப்போதிருந்தே தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளட்டும்...

இறுதியாக ஒரு சந்தேகம் : பல இடங்களில் இவர் யாரைக் குற்றம்சொல்கிறார் என்று தெரியவில்லை.
தேர்தல் அல்லது பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் போது மட்டுமே சில தலைகள் சங்கத்தில் தென்படும்.
இவர்கள் முன்வைத்த வேட்பாளர்கள் செயற்குழுவுக்குப் பெரும் தலைவலியாக இருப்பார்கள். 
அந்த சதிக்குழுவுக்குத் தலைமை வகிக்கும் இந்தக் காகிதப் புலிகள் பொதுக்குழுவில் ஏக ரகளை செய்வார்கள். 
தங்களின் சட்ட ஞானத்தை முன்வைத்து காகிதப் புலிகளாக கர்ஜிப்பார்கள்.
பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு சுத்தமாக காணாமல் போய்விடுவார்கள். 
என்றெல்லாம் இவர் யாரை குற்றம் சாட்டுகிறார் என்று தெளிவாகத் தெரிவிக்காதவரை யாரும் இதற்கு மறுப்புக்கூறப் போவதில்லை. நமக்குத் தெரிந்தவரை இந்த வர்ணனைக்குப் பொருத்தமாக எவரையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

இப்படிப்பட்ட, முகம்தெரியாத, முகவரி இல்லாத இவர்களின் நிழல்களுடன் மோதி, வெற்றிவீரராகத் தோளையும் நெஞ்சையும் நிமிர்த்தி எக்காளமிடுவதை இதற்கு முன்பும் கண்டிருக்கிறோம்... இப்போதும் பார்க்கிறோம்....




Friday, 23 September 2011

திரித்தல்களின் உச்சம்!



ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
என்ற குறள்வழி நடக்கும் சங்கச் சீரமைப்பு அணி, நடைபெற இருக்கும் சங்கத் தேர்தலில் எதிர்த்தரப்பினரை விமர்சனம் செய்யாமல், நமது தகுதிகளை மட்டுமே முன்வைத்து, நாகரிகமான முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது, அதன்படியே செய்தும் வருகிறது. ஆனால், நேற்று புதிய பிரசுரம் ஒன்று முளைத்திருக்கிறது. பல பொய்களும் திரித்தல்களும் கலந்து வந்திருக்கிறது அந்தப் பிரசுரம். இப்படி எழுதுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல, வழக்கம்தான். இதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று தோன்றினாலும், பதிலளிக்கவில்லை என்றால் அவர் எழுதியது கண்டு அனைவரும் வாயடைத்துப்போய் விட்டார்கள் என்று மேலும் பிரசுரங்கள் வெளியிடத் தொடங்கி தொடங்கி விடுவார் என்பதால் சுருக்கமாக சில தகவல்கள், உண்மைகள், கேள்விகள்.


தன்னை சத்தியசீலராகக் காட்டிக்கொண்டு கேள்விகள் கேட்டிருக்கும் இந்த சட்டஞானி, தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் ஆயுள் உறுப்பினர் என்றும், அதற்கு ஆதாரமாக ஒரு ரசீதை முன்வைத்ததாகவும், அந்த ரசீது மோசடி செய்து தயாரிக்கப்பட்ட பொய் ரசீது என்று கண்டறியப்பட்டதாகவும், அந்த மோசடிக்காக கல்விக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்திலேயே நீக்கப்பட்டார் என்றும் சொல்கிறார்களே!? அது உண்மையா!?
அது உண்மை அல்ல என்றால், எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்துக்குப் போவதையே வழக்கமாகக் கொண்டிருந்தவர், தன்னை நீக்கியதற்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகாதது ஏன் !? உண்மை என்றால், தானே மோசடி செய்துவிட்டு மற்றவர்களை விமர்சனம் செய்யலாமா !?

தமிழ்ச் சங்கத்தில் 150 உறுப்பினர்களை சேர்ப்பதில் தாமதம் செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறாரே! அந்த 150 உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்று இவர்தான் வாதாடினாரா?. அந்த 150 பேரும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டதும் இவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தது தவறு என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது இவரல்லவா!? இன்று அவர்களைச் சேர்த்ததற்காக கண்ணீர் வடித்தால் அது முதலைக் கண்ணீர்தானே!?

கீதா உணவக வழக்கு விவகாரம் பற்றியும், சுந்தரராஜன் விவகாரம் பற்றியும் நிறைய்...ய்ய எழுதியிருக்கிறார். கீதா உணவகம் மற்றும் சுந்தரராஜன் விவகாரத்தை  நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றது யார் !? யாரோ தோட்டமிட யாரோ கனிபறித்த கதைதானே நடந்தது !? காரணம் - நீதிமன்றத்தின் காலதாமதம். கீதா உணவகம் காலி செய்துவிட்டுப் போய்விடாமல் இருக்க நியமிக்கப்பட்டிருந்த காவல்காரர்களை விலக்கி, கீதா உணவகத்தார் தமது உடைமைகளையும் கதவையும்கூடப் பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்ல அனுமதித்தது யார்?

தற்போது பொறுப்பில் இருக்கும் செயற்குழு முக்கியஸ்தர்களின் முழு ஆதரவோடு, ஆசிகளோடு போட்டியில் இறங்கியிருக்கும் இவர், எப்போதும் சங்கத்திலேயே இருந்து, சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறாராமே !?. தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று உறுதியளித்து விட்டுத்தான் சங்க உறுப்பினர் பட்டியல் விஷயத்தில் பணி செய்ய முன்வந்தார், ஆனால் பிறகு போட்டியில் இறங்கி விட்டார் - நான் என்ன செய்வது என்று புலம்புகிறாரே இன்றைய தலைவர் கிருஷ்ணமூர்த்தி ! வேட்பாளராக மாட்டேன் என்று வாக்களித்து விட்டு, உறுப்பினர் விவரங்களை எல்லாம் தொகுத்து எடுத்துக்கொண்ட பின்னர் தேர்தலில் இறங்குவது சட்டஞானம் மிக்கவர் செய்யக்கூடிய செயலா!?

இன்றைய செயற்குழுவின் முக்கியஸ்தர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி சேவை புரிபவர், இந்த செயற்குழு முக்கியஸ்தர்கள் பதவி வகித்த இரண்டரை ஆண்டுகளில் கீதா உணவகம் விஷயத்தில் என்ன செய்தார்கள் என்பதையும் கூறியிருக்கலாமே!? இதுபற்றி விசாரணைகள் ரகசியமாக நடைபெறுகின்றன என்று கடந்த பேரவையில் இந்த செயற்குழு முக்கியஸ்தர்கள் கூறினார்களே!? சுமார் இரண்டாண்டுகள் ஆகிவிட்ட பிறகாவது அந்த ரகசியங்கள் என்ன என்பதையும் கொஞ்சம் கூறியிருக்கலாம் அல்லவா!?

பதவிக்காலத்தை நீட்டித்துக்கொள்ள அமைப்புவிதிகளைத் திருத்தும் நோக்கத்துடன் 2008இல் சிறப்புப் பேரவையைக் கூட்ட முயற்சி செய்து, உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்... உறுப்பினர்கள் மனமறிந்து அதைக் கைவிட்டாலும் குற்றமா?

2008 ஜூலையில் பதவிக்காலம் முடிந்த பின்னும் தேர்தல் நடத்தாமல் இருந்தது குறித்து அன்று கடிதம் எழுதிய இவர், நடப்பிலிருக்கும் செயற்குழுவுக்கு பிப்ரவரி மாதமே பதவிக்காலம் முடிந்தது பற்றியும் கடிதம் எழுதியிருக்கலாமே !? ஒருவேளை நடப்பிலிருக்கும் செயற்குழுவுக்கும் சேர்த்து குட்டு வைக்கிறாரோ!? அப்படியானால் அவர்களின் ஆதரவோடு ஏன் வாக்குக் கேட்க வேண்டும் !? அவர்களுக்கு எதிராக இருந்தல்லவா போட்டியிட வேண்டும் !?

போலிக் கையெழுத்துப் போட்டு மனு கொடுத்தவர்கள் என்று குற்றம் சாட்டுகிறாரே !? உறுப்பினர் பட்டியலை சரிசெய்வதற்காக பலநாட்கள் இவர் தமிழ்ச் சங்கத்திலேயே இருந்து உழைத்தாராமே !? சட்டஞானம் மிக்க இவர் தயாரித்த அந்தப் பட்டியலில் 500க்கும் மேற்பட்ட பெயர்களை ஒரேயடியாக நீக்கி விட்டதையும், தில்லிக்கு வெளியே இருப்பவர்களை சேர்த்ததையும், தில்லியில் வசிப்பவர்கள் பலரை நீக்கி விட்டதையும் குறிப்பிட்டிருக்கலாமே!?

  • டி.என். சேஷன், விட்டல், இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி, வா.செ. குழந்தைசாமி, நீதியரசர் மோகன், நீதியரசர் ஏஆர். லட்சுமணன் போன்ற பிரபலங்களை எல்லாம் ஒரே அடியில் பட்டியலில் அடித்து விட்டாரே, அதையும் குறிப்பிட்டிருக்கலாமே !?
  • அந்த உறுப்பினர் பட்டியல் ஏகப்பட்ட குளறுபடிகள் கொண்டதாக இருந்ததற்காக தற்போதைய செயலர் கடவுள்தான் தமிழ்ச் சங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறினாராமே!? அதையும் கூறியிருக்கலாமே !?
  • ஒருவேளை சரியான பட்டியலை தான் தயாரித்து வைத்துக்கொண்டு இன்றைய பொதுச் செயலரை மாட்டி விடுவதற்காக கோளாறான பட்டியலை தயாரித்துக் கொடுத்தாரோ!?
  • இவர் துணைநின்று தயாரித்த அந்த உறுப்பினர் பட்டியல் காரணமாகத்தானே இன்றைய தலைவரும் செயலரும் தலைகுனிந்து நிற்க வேண்டியதாயிற்று !? அந்த உறுப்பினர் பட்டியல் காரணமாகத்தானே இன்று சங்கம் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்டுள்ளது. அதையும் கூறியிருக்கலாமே!?
  • ஒருவேளை சங்கத்தை நீதிமன்றத்தில் இழுத்துவிடத்தான் இப்படியொரு பட்டியல் தயாரிக்கும் வேலையில் இறங்கினாரோ!?
  • ஏற்கெனவே சிக்கலில் ஆழ்ந்து கிடக்கும் செயற்குழு முக்கியஸ்தர்களை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கத்தான் திட்டம்போட்டு வேலை செய்தாரோ!?


பேரவைக் கூட்டத்தை ஆண்டுதோறும் கூட்டுவது வீண்செலவு என்று கிருஷ்ணமணி கூறினார் என்கிறாரே ! இதுதான் திரித்தலின் உச்சம். எப்படி என்று பார்ப்போம்.

46ஆவது பேரவைக்கூட்ட அறிக்கையில், 45ஆவது பேரவைக்கூட்ட நடவடிக்கைக் குறிப்பில், பக்கம் 11இல் இந்த விஷயம் இடம் பெற்றிருக்கிறது. ஆண்டுக்கொருமுறை பேரவை கூட்டப்படாதது குறித்து தான் கடிதம் எழுதியதற்கு, அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேரவைக்கூட்டம் நடத்துவதே மரபு என்று முந்தைய தலைவர் பதிலளித்ததாக விசுவநாதன் அவர்கள் வருத்தத்தோடு குறிப்பிட்டார்.
இதுதான் 45ஆவது பேரவையில் நடந்த விஷயம். விசுவநாதன் அவர்கள் நாகரிகம் கருதி முந்தைய தலைவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார். அதற்காக அவரைப் பாராட்டுவது அல்லவா அவசியம். அதை விட்டு விட்டு, கிருஷ்ணமணி கூறியதாக இந்த சட்டஞானி எழுதியிருக்கிறாரே !? என்னே இவரது தமிழ் ஞானம்.
அதுவும் சரிதான் !? நாகரிகமாகச் சொல்வதெல்லாம் இவரைப் போன்றவர்களுக்கு எங்கே புரியப்போகிறது.

எல்லாம் சரி, இவர் குறிப்பிட்டதுபோல, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறைதான் பேரவை நடத்த வேண்டும் என்று கூறிய அந்த முந்தைய தலைவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா !?
தலைவராக இருந்த திரு பாலச்சந்திரன் அவர்கள் பணிமாற்றம்  காரணமாக தலைவர் பொறுப்பிலிருந்து இடையில் விலகிக் கொண்ட பிறகு, துணைத்தலைவராக இருந்தவர் தலைவராகி, தமிழ்ச் சங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத நடைமுறைகளை எல்லாம் உருவாக்கினாரே!? அந்தப் பெரியவர் அல்லவா அப்படிச் சொன்னது !?
150 உறுப்பினர்களை சேர்க்க விடாமல் தடுத்து வந்த பெரியவர் அல்லவா அப்படிச் சொன்னது!?
யார் அந்தப் பெரியவர் ?

பொய்யும் திரிப்புகளும் கலந்து அந்தப் பிரசுரத்தை எழுதியவரின் ஆத்மநண்பரும், வடக்குவாசல் ஆசிரியருமான பென்னேஸ்வரன் அவர்கள் குருவாக மதிக்கிற ஐயா சௌந்திரராஜன் அல்லவா அந்தப் பெரியவர் !

ஐயா சட்டஞானியே! தமிழில் பிரசுரம் வெளியிடுவதற்கு முன்னால் தமிழை சரியாகப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் கற்றுக்கொண்டால் நல்லது.

பலப்பல ஆண்டுகளுக்கு தமிழ்ச் சங்கத்தைச் சுருட்டிக்கொண்டு போகிற தொலைநோக்குத் திட்டம் ஏதும் எம்மிடம் இல்லை. கடந்தகாலத் தவறுகளை எல்லாம் இயன்ற அளவுக்குத் திருத்தி சீரமைப்பதற்கான திட்டம்தான் எங்களிடம் இருக்கிறது.

குறைகளைக் குறைத்தும் நிறைகளை நிறைத்தும்
இனிவரும் காலத்தில் சங்கத்தை சீரமைத்து
செவ்வனே நடத்திச் செல்ல உறுதியளித்து
உங்கள் ஆதரவும் வாக்குகளும் கோரும்
சங்கச் சீரமைப்பு அணி

திரு பி. ராகவன் நாயுடு


இணைச்செயலர் வேட்பாளர்       -      வேட்பாளர் எண் 10
1984ஆம் ஆண்டு முதல் சங்கத்தின் உறுப்பினர். செயற்குழு உறுப்பினர், இணைப் பொருளாளர், இணைச் செயலர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர். இவர் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சங்கத்திற்கு தொண்டாற்றி வருபவர்.
1983-86 ஆண்டுகளில் சங்கத்தின் கலையரங்கக் கட்டிடம் உருவாகி வந்த காலகட்டத்தில் பலவிதங்களில் உதவியவர். குறிப்பாக, கலையரங்கின் முன்பகுதிக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்புச் சட்டங்களையும் கண்ணாடிகளையும் நன்கொடையாகப் பெற்றுத் தந்தவர். இதுதவிர, பலமுறை தானே நன்கொடை அளித்தது மட்டுமின்றி பலரிடமிருந்தும் நன்கொடை பெற்றுத் தந்தவர்.
இவர் ஒரு ஆன்மீக சீலர். ஆன்மீகப் பற்றினால் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன்மூலம் பகவான் பாபாவுக்கு ஆலயம் எழுப்பியுள்ளார். ஆண்டுதோறும் சிறப்பாக விழாவும் எடுத்து வருகிறார். கணிசமான தொகையின் மூலம் ரமண மகரிஷியின் பெயரில் அறக்கட்டளை நிறுவி, அதன்மூலம் ஆண்டுதோறும் சங்கத்தில் மகரிஷி விழா நடத்தி மகரிஷியின் மங்காத மகிமையைப் பரப்பி வருகிறார்.
விருந்தோம்பும் பண்பு இவரின் உடன்பிறந்தது. சங்கத்தில் மாலை நிகழ்ச்சிகள் முடிந்த பின் எண்ணற்ற முறை இரவு விருந்துகளை அளித்தவர். திரைப்படங்களின் இடைவேளையில் தேநீர் வழங்கும் ஏற்பாட்டை அறிமுகம் செய்தவரும் இவரே.
இவரது தமிழ்ப் பணி, பொதுப்பணி, சங்கப் பணி, ஆன்மீகப் பணிகளைப் பாராட்டும் முகமாக அண்மையில் தினமணி இதழில் வெளியான கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.
இவருடைய அறிமுகமும் நட்பும் மகிழ்ச்சி தரும் அனுபவம். இவரது தமிழ்ப்பணி மேலும் சிறப்பாகத் தொடரும் வகையில் சங்கத்தின் இணைச்செயலர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம்.
வழக்கறிஞர் திரு எம்.என். கிருஷ்ணமணி அவர்கள் தலைமையில்,
செயல்வீரர் முகுந்தனுக்கு துணை நின்று,
அன்புக்குரிய அறிவழகனுடன் கைகோர்த்துப்  போட்டியிடும்
திரு ராகவன் நாயுடு அவர்களுக்கும்
சங்கச் சீர்திருத்த அணி வேட்பாளர்களுக்கும் கீழ்க்கண்ட எண்களில்
வாக்களித்து வெற்றி தேடித்தருமாறு வேண்டுகிறோம்.
கிருஷ்ணமூர்த்தி                                                                       பி.ஆர். வேங்கடகிரி
உறுப்பினர் எண் 170                                             சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலர்