Sunday 18 September 2011

முகுந்தன் - உங்களில் ஒருவர்



   திரு இராஜகோபாலன் முகுந்தன் பிறந்ததும் படித்ததும் தமிழகத்தின் திருவையாற்றில். பொங்கிவரும் காவிரி போல் தமிழையும், இசையையும் சீரோடும் சிறப்போடும் வளர்த்த திருவையாற்றில், தியாகையர் ஆராதனை நாடறிந்த ஒரு விழா. தமிழையும் தமிழிசையையும் கலந்த மண்வாசனையுடன் 1980களில் வங்கிப் பணிக்காக புதுதில்லி வந்தவர் திரு முகுந்தன். வங்கிப் பணியோடு, தில்லித் தமிழ் மக்கள் பணியையும் ஆற்றிட அவர் எண்ணியதன் பயன் -- 30 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களில் ஒருவராக தில்லியிலேயே வசித்து, உங்கள் மனம் கவர்ந்தவராக வலம் வருகிறார்.
தமிழகத்திலிருந்து வருகை தருகிற இலக்கிய, ஆன்மீக, கலையுலக, அரசியல்சார்ந்த பிரமுகர்கள் அனைவரையும் வரவேற்று, தங்க வைத்து, அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதில் தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறார்.
   தலைநகரில் இவரது தமிழ்ப்பணிகளின் முன்னேற்றம் வியக்கத்தக்கது. கரோல்பாக், இராமகிருஷ்ணபுரம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களை ஒன்றுதிரட்டி, கலை-இலக்கிய மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற அவர் ஒரு அணிலாய் இருந்து ஆற்றத் துவங்கிய பணி இன்று விரிந்து பரந்து, தலைநகரிலும் தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான அறிஞர்களையும் தலைவர்களையும் நண்பர்களாகப் பெற்றுள்ளார்.
   தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலர் பொறுப்பில் இருந்தபோது, இலக்கிய, நாட்டிய, நாடகக் கலைஞர்களை அழைத்து வந்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கவியரசு வைரமுத்து, பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், ஆறு, அழகப்பன், கவிஞர் வாலி, பா. விஜய், நாகை முகுந்தன், நெல்லை கண்ணன், திருப்பூர் கிருஷ்ணன், அறிவொளி, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தம், மதுரை ராஜா மற்றும் சின்னத்திரை வரதராஜன், மாலி, ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர் மற்றும் இசைக்கலைஞர்களான டி.எம். சௌந்திரராஜன், பி. சுசீலா, சுதா ரகுநாதன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பத்மா சுப்பிரமணியம், பாரதி ராஜா, பாக்கியராஜ், புஷ்பவனம் குப்புசாமி, என இவர் தமிழ்ச் சங்கத்துக்கு அழைத்து வந்த பிரபலங்களின் பட்டியல் மிக நீளமானது. 2002-2004 மற்றும் 2006-2009 துவக்கம் வரை இவர் பொறுப்பு வகித்த காலத்தில் சங்கத்திற்காக இயன்ற அளவு முனைப்பாகப் பணி புரிந்தார்.
·         முன்னாள் குடியரசுத் தலைவர், தஞ்சைத் தமிழ்மண் தந்த மேதகு ஆர். வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் கர்ம வீரர் காமராசர் அவர்களின் 100ஆவது பிறந்தநாள் விழா.
·         மேதகு அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது, அவர் முன்னிலையில் தமிழகத்திலிருந்தும் தலைநகரிலிருந்தும் பிரபலக் கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம்.
·         பா.ஜ.க. தலைவர் திருமிகு அத்வானி அவர்கள் கலந்து கொண்ட பொங்கல் விழா.
·         காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி கலந்து கொண்ட காமராசர் விழா.
·         பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கலந்து கொண்ட பொங்குதமிழ் இசை நிகழ்ச்சி.
·         பராமரிப்பு இல்லாத நிலையில் இருந்த திருவள்ளுவர் சிலையை தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நிறுவ முயற்சி செய்து, தில்லி முதல்வர் திருமதி ஷீலா தீட்சித் அவர்களின் உதவியால், நிறைவேற்றியது.
·         கலைஞர் தலைமையில், நிதியமைச்சர் திரு ப. சிதம்பரம், திருமதி ஷீலா தீட்சித் ஆகியோர் முன்னிலையில் வள்ளுவர் சிலை கால்கோள் விழா நடத்தியது.
·         தமிழை செம்மொழி என அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடத்திய பல்வேறு தலைவர்கள், அறிஞர்களுக்கு துணைநின்று, கோரிக்கைகளை அளிப்பதற்காக அன்றைய பிரதமர் திருமிகு அடல் பிகாரி வாஜ்பாய், அன்றைய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்தது.
·         கலைஞர் அவர்களுக்கு செம்மொழிச் செம்மல் என்ற விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தியது.
இப்படி ஏராளமான நிகழ்ச்சிகளை சங்கச் செயலராக திரு முகுந்தன் அவர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார். இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்தார்.

   செயலர் பொறுப்பில் இல்லாதபோதும் அவருடைய பணிகள் சற்றும் குறையவில்லை.
·   ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக போராட்டம் நடத்திய தலைவர்களுடன் கரம்கோர்த்து இந்தியப் பிரதமரை சந்தித்தார்.
·         அண்மையில் இந்திய அரசியல் நிலவரத்தையே ஆட்டம் காணவைத்த அன்னா ஹசாரே-வுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட நடிகர் இளைய தளபதி விஜய்-உடன் இணைந்து உண்ணாநோன்பில் கலந்து கொண்டார்.
·         சிலநாட்களுக்கு முன் திரைவிருது பெற வந்த கே. பாலச்சந்தர், கவிஞர் வைரமுத்து, தனுஷ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு சிறப்புச் செய்தார்.
·         தில்லி முத்தமிழ்ப் பேரவை என்ற அமைப்பை நிறுவி, திரு எம்.என். கிருஷ்ணமணி, கண்ணன், ரமாமணி சுந்தர், கே.வி.கே. பெருமாள் உள்ளிட்ட பெரியோர்களின் ஆதரவுடன் பல இசை நிகழ்ச்சிகளையும் நாடக நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தினார்.
இவ்வாறாக இவர் நடத்திக்காட்டிய நிகழ்ச்சிகள் ஏராளம்.

   தில்லிவாழ் தமிழர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் தேவை அறிந்து உதவி செய்பவர் திரு முகுந்தன்.
·         எஸ்.ஆர்.எம். கல்லூரித் தாளாளர் திரு பச்சைமுத்து அவர்களிடமிருந்து தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்திற்கு நான்கரை லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுத் தந்தவர்.
·         செட்டிநாட்டரசர் மாண்பமை எம்.ஏ.எம். இராமசாமி அவர்களை அழைத்து வந்து, தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்திற்காக இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுத் தந்தவர்.
·         இரண்டு ஆண்டு காலம் ஊதியம் வழங்கப்படாமல் தவித்த, கல்விக் கழகத்தின் 33 ஆசிரியர்களுக்காக தில்லி முதல்வரை சந்தித்து, ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் ஊதியம் கிடைக்கச் செய்தவர்.
·         கர்நாடக சங்கீத சபா நிறுவனத்துக்காக, தில்லி அரசிடமிருந்து 25 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைக்க உதவியவர்.
   இவர் செய்து முடித்தவை ஏராளம் என்றாலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற சங்கச் செயலர் பொறுப்புக்குப் போட்டியிடுகிறார்.
   திரு எம்.என். கிருஷ்ணமணி அவர்கள் தலைமையில், சங்கச் சீரமைப்பு அணியில் போட்டியிடுகிறார் திரு முகுந்தன் அவர்கள். இந்த அணியின் வேட்பாளர்கள் அனைவருக்கும் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

No comments: