Friday 23 September 2011

திரித்தல்களின் உச்சம்!



ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
என்ற குறள்வழி நடக்கும் சங்கச் சீரமைப்பு அணி, நடைபெற இருக்கும் சங்கத் தேர்தலில் எதிர்த்தரப்பினரை விமர்சனம் செய்யாமல், நமது தகுதிகளை மட்டுமே முன்வைத்து, நாகரிகமான முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது, அதன்படியே செய்தும் வருகிறது. ஆனால், நேற்று புதிய பிரசுரம் ஒன்று முளைத்திருக்கிறது. பல பொய்களும் திரித்தல்களும் கலந்து வந்திருக்கிறது அந்தப் பிரசுரம். இப்படி எழுதுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல, வழக்கம்தான். இதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று தோன்றினாலும், பதிலளிக்கவில்லை என்றால் அவர் எழுதியது கண்டு அனைவரும் வாயடைத்துப்போய் விட்டார்கள் என்று மேலும் பிரசுரங்கள் வெளியிடத் தொடங்கி தொடங்கி விடுவார் என்பதால் சுருக்கமாக சில தகவல்கள், உண்மைகள், கேள்விகள்.


தன்னை சத்தியசீலராகக் காட்டிக்கொண்டு கேள்விகள் கேட்டிருக்கும் இந்த சட்டஞானி, தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் ஆயுள் உறுப்பினர் என்றும், அதற்கு ஆதாரமாக ஒரு ரசீதை முன்வைத்ததாகவும், அந்த ரசீது மோசடி செய்து தயாரிக்கப்பட்ட பொய் ரசீது என்று கண்டறியப்பட்டதாகவும், அந்த மோசடிக்காக கல்விக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்திலேயே நீக்கப்பட்டார் என்றும் சொல்கிறார்களே!? அது உண்மையா!?
அது உண்மை அல்ல என்றால், எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்துக்குப் போவதையே வழக்கமாகக் கொண்டிருந்தவர், தன்னை நீக்கியதற்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகாதது ஏன் !? உண்மை என்றால், தானே மோசடி செய்துவிட்டு மற்றவர்களை விமர்சனம் செய்யலாமா !?

தமிழ்ச் சங்கத்தில் 150 உறுப்பினர்களை சேர்ப்பதில் தாமதம் செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறாரே! அந்த 150 உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்று இவர்தான் வாதாடினாரா?. அந்த 150 பேரும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டதும் இவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தது தவறு என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது இவரல்லவா!? இன்று அவர்களைச் சேர்த்ததற்காக கண்ணீர் வடித்தால் அது முதலைக் கண்ணீர்தானே!?

கீதா உணவக வழக்கு விவகாரம் பற்றியும், சுந்தரராஜன் விவகாரம் பற்றியும் நிறைய்...ய்ய எழுதியிருக்கிறார். கீதா உணவகம் மற்றும் சுந்தரராஜன் விவகாரத்தை  நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றது யார் !? யாரோ தோட்டமிட யாரோ கனிபறித்த கதைதானே நடந்தது !? காரணம் - நீதிமன்றத்தின் காலதாமதம். கீதா உணவகம் காலி செய்துவிட்டுப் போய்விடாமல் இருக்க நியமிக்கப்பட்டிருந்த காவல்காரர்களை விலக்கி, கீதா உணவகத்தார் தமது உடைமைகளையும் கதவையும்கூடப் பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்ல அனுமதித்தது யார்?

தற்போது பொறுப்பில் இருக்கும் செயற்குழு முக்கியஸ்தர்களின் முழு ஆதரவோடு, ஆசிகளோடு போட்டியில் இறங்கியிருக்கும் இவர், எப்போதும் சங்கத்திலேயே இருந்து, சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறாராமே !?. தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று உறுதியளித்து விட்டுத்தான் சங்க உறுப்பினர் பட்டியல் விஷயத்தில் பணி செய்ய முன்வந்தார், ஆனால் பிறகு போட்டியில் இறங்கி விட்டார் - நான் என்ன செய்வது என்று புலம்புகிறாரே இன்றைய தலைவர் கிருஷ்ணமூர்த்தி ! வேட்பாளராக மாட்டேன் என்று வாக்களித்து விட்டு, உறுப்பினர் விவரங்களை எல்லாம் தொகுத்து எடுத்துக்கொண்ட பின்னர் தேர்தலில் இறங்குவது சட்டஞானம் மிக்கவர் செய்யக்கூடிய செயலா!?

இன்றைய செயற்குழுவின் முக்கியஸ்தர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி சேவை புரிபவர், இந்த செயற்குழு முக்கியஸ்தர்கள் பதவி வகித்த இரண்டரை ஆண்டுகளில் கீதா உணவகம் விஷயத்தில் என்ன செய்தார்கள் என்பதையும் கூறியிருக்கலாமே!? இதுபற்றி விசாரணைகள் ரகசியமாக நடைபெறுகின்றன என்று கடந்த பேரவையில் இந்த செயற்குழு முக்கியஸ்தர்கள் கூறினார்களே!? சுமார் இரண்டாண்டுகள் ஆகிவிட்ட பிறகாவது அந்த ரகசியங்கள் என்ன என்பதையும் கொஞ்சம் கூறியிருக்கலாம் அல்லவா!?

பதவிக்காலத்தை நீட்டித்துக்கொள்ள அமைப்புவிதிகளைத் திருத்தும் நோக்கத்துடன் 2008இல் சிறப்புப் பேரவையைக் கூட்ட முயற்சி செய்து, உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்... உறுப்பினர்கள் மனமறிந்து அதைக் கைவிட்டாலும் குற்றமா?

2008 ஜூலையில் பதவிக்காலம் முடிந்த பின்னும் தேர்தல் நடத்தாமல் இருந்தது குறித்து அன்று கடிதம் எழுதிய இவர், நடப்பிலிருக்கும் செயற்குழுவுக்கு பிப்ரவரி மாதமே பதவிக்காலம் முடிந்தது பற்றியும் கடிதம் எழுதியிருக்கலாமே !? ஒருவேளை நடப்பிலிருக்கும் செயற்குழுவுக்கும் சேர்த்து குட்டு வைக்கிறாரோ!? அப்படியானால் அவர்களின் ஆதரவோடு ஏன் வாக்குக் கேட்க வேண்டும் !? அவர்களுக்கு எதிராக இருந்தல்லவா போட்டியிட வேண்டும் !?

போலிக் கையெழுத்துப் போட்டு மனு கொடுத்தவர்கள் என்று குற்றம் சாட்டுகிறாரே !? உறுப்பினர் பட்டியலை சரிசெய்வதற்காக பலநாட்கள் இவர் தமிழ்ச் சங்கத்திலேயே இருந்து உழைத்தாராமே !? சட்டஞானம் மிக்க இவர் தயாரித்த அந்தப் பட்டியலில் 500க்கும் மேற்பட்ட பெயர்களை ஒரேயடியாக நீக்கி விட்டதையும், தில்லிக்கு வெளியே இருப்பவர்களை சேர்த்ததையும், தில்லியில் வசிப்பவர்கள் பலரை நீக்கி விட்டதையும் குறிப்பிட்டிருக்கலாமே!?

  • டி.என். சேஷன், விட்டல், இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி, வா.செ. குழந்தைசாமி, நீதியரசர் மோகன், நீதியரசர் ஏஆர். லட்சுமணன் போன்ற பிரபலங்களை எல்லாம் ஒரே அடியில் பட்டியலில் அடித்து விட்டாரே, அதையும் குறிப்பிட்டிருக்கலாமே !?
  • அந்த உறுப்பினர் பட்டியல் ஏகப்பட்ட குளறுபடிகள் கொண்டதாக இருந்ததற்காக தற்போதைய செயலர் கடவுள்தான் தமிழ்ச் சங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறினாராமே!? அதையும் கூறியிருக்கலாமே !?
  • ஒருவேளை சரியான பட்டியலை தான் தயாரித்து வைத்துக்கொண்டு இன்றைய பொதுச் செயலரை மாட்டி விடுவதற்காக கோளாறான பட்டியலை தயாரித்துக் கொடுத்தாரோ!?
  • இவர் துணைநின்று தயாரித்த அந்த உறுப்பினர் பட்டியல் காரணமாகத்தானே இன்றைய தலைவரும் செயலரும் தலைகுனிந்து நிற்க வேண்டியதாயிற்று !? அந்த உறுப்பினர் பட்டியல் காரணமாகத்தானே இன்று சங்கம் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்டுள்ளது. அதையும் கூறியிருக்கலாமே!?
  • ஒருவேளை சங்கத்தை நீதிமன்றத்தில் இழுத்துவிடத்தான் இப்படியொரு பட்டியல் தயாரிக்கும் வேலையில் இறங்கினாரோ!?
  • ஏற்கெனவே சிக்கலில் ஆழ்ந்து கிடக்கும் செயற்குழு முக்கியஸ்தர்களை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கத்தான் திட்டம்போட்டு வேலை செய்தாரோ!?


பேரவைக் கூட்டத்தை ஆண்டுதோறும் கூட்டுவது வீண்செலவு என்று கிருஷ்ணமணி கூறினார் என்கிறாரே ! இதுதான் திரித்தலின் உச்சம். எப்படி என்று பார்ப்போம்.

46ஆவது பேரவைக்கூட்ட அறிக்கையில், 45ஆவது பேரவைக்கூட்ட நடவடிக்கைக் குறிப்பில், பக்கம் 11இல் இந்த விஷயம் இடம் பெற்றிருக்கிறது. ஆண்டுக்கொருமுறை பேரவை கூட்டப்படாதது குறித்து தான் கடிதம் எழுதியதற்கு, அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேரவைக்கூட்டம் நடத்துவதே மரபு என்று முந்தைய தலைவர் பதிலளித்ததாக விசுவநாதன் அவர்கள் வருத்தத்தோடு குறிப்பிட்டார்.
இதுதான் 45ஆவது பேரவையில் நடந்த விஷயம். விசுவநாதன் அவர்கள் நாகரிகம் கருதி முந்தைய தலைவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார். அதற்காக அவரைப் பாராட்டுவது அல்லவா அவசியம். அதை விட்டு விட்டு, கிருஷ்ணமணி கூறியதாக இந்த சட்டஞானி எழுதியிருக்கிறாரே !? என்னே இவரது தமிழ் ஞானம்.
அதுவும் சரிதான் !? நாகரிகமாகச் சொல்வதெல்லாம் இவரைப் போன்றவர்களுக்கு எங்கே புரியப்போகிறது.

எல்லாம் சரி, இவர் குறிப்பிட்டதுபோல, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறைதான் பேரவை நடத்த வேண்டும் என்று கூறிய அந்த முந்தைய தலைவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா !?
தலைவராக இருந்த திரு பாலச்சந்திரன் அவர்கள் பணிமாற்றம்  காரணமாக தலைவர் பொறுப்பிலிருந்து இடையில் விலகிக் கொண்ட பிறகு, துணைத்தலைவராக இருந்தவர் தலைவராகி, தமிழ்ச் சங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத நடைமுறைகளை எல்லாம் உருவாக்கினாரே!? அந்தப் பெரியவர் அல்லவா அப்படிச் சொன்னது !?
150 உறுப்பினர்களை சேர்க்க விடாமல் தடுத்து வந்த பெரியவர் அல்லவா அப்படிச் சொன்னது!?
யார் அந்தப் பெரியவர் ?

பொய்யும் திரிப்புகளும் கலந்து அந்தப் பிரசுரத்தை எழுதியவரின் ஆத்மநண்பரும், வடக்குவாசல் ஆசிரியருமான பென்னேஸ்வரன் அவர்கள் குருவாக மதிக்கிற ஐயா சௌந்திரராஜன் அல்லவா அந்தப் பெரியவர் !

ஐயா சட்டஞானியே! தமிழில் பிரசுரம் வெளியிடுவதற்கு முன்னால் தமிழை சரியாகப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் கற்றுக்கொண்டால் நல்லது.

பலப்பல ஆண்டுகளுக்கு தமிழ்ச் சங்கத்தைச் சுருட்டிக்கொண்டு போகிற தொலைநோக்குத் திட்டம் ஏதும் எம்மிடம் இல்லை. கடந்தகாலத் தவறுகளை எல்லாம் இயன்ற அளவுக்குத் திருத்தி சீரமைப்பதற்கான திட்டம்தான் எங்களிடம் இருக்கிறது.

குறைகளைக் குறைத்தும் நிறைகளை நிறைத்தும்
இனிவரும் காலத்தில் சங்கத்தை சீரமைத்து
செவ்வனே நடத்திச் செல்ல உறுதியளித்து
உங்கள் ஆதரவும் வாக்குகளும் கோரும்
சங்கச் சீரமைப்பு அணி

1 comment:

K. hariharan said...

dear friends,
Delhi Tamil Sangam was established for the welfare of Tamilians living in Delhi and was functioning smoothly till 1993 when some vested interested people entered the management and since last two decades have spoilt the entire unity of Tamilians in Delhi with their internal ego and fueds. These things can be resolved with free and fair dialogue amongst all of us and we need not wash dirty linen in public accusing each other like politicians do else where. for the sake of Tamil and Tamilians It is an humble appeal to all please shed hatred and let us work together for the welfare of our community. Already we have come too far from our native places leaving our birth place, relations and other nativities behind, let us be an example to others.
This only a request to all.
regards,
Hariharan