Friday 23 September 2011

தமிழ்ச் சங்கமா ஆங்கிலச் சங்கமா... - தொடர்ச்சி


அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே

சங்கத்தின் எதிர்கால நலன்கருதி, சங்கச் சீரமைப்பு அணியின் வேட்பாளர்கள் சிலரும், மூத்த உறுப்பினர்கள் சிலரும் நடைபெற இருக்கும் பேரவையின் பரிசீலனைக்கு சில தீர்மானங்களை முன்வைத்தார்கள். இந்தத் தீர்மானங்களை எழுத்து வடிவில் சங்கச் செயற்குழுவுக்கு அளித்தார்கள். இந்த செயற்குழு, சங்க விதிமுறைகளை துச்சமென மதித்து, தீர்மானங்களை பேரவையில் வைக்க முடியாது என்று அறிவிப்புப் பலகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சங்கச் செயற்குழுவால் நிராகரிக்கப்பட்ட ஒரு தீர்மானம் பற்றி முந்தைய பதிவில் நீங்கள் படித்து, சிரித்து பிறகு சிந்தித்தும் இருப்பீர்கள்.

அதைப் படிக்காதவர்கள் இங்கே கிளிக்கவும்.

நிராகரிக்கப்பட்ட இன்னொரு தீர்மானம் பற்றி இப்போது பார்ப்போம்.

தேர்தல் துணைவிதிகள் -
தற்போது நடைமுறையில் இருக்கும் சங்கத்தின் அமைப்புவிதிகள் 1995இல் திருத்தப்பட்டவை. பழைய அமைப்பு விதிகளில் தேர்தல் குறித்து சில விதிகளும் சுருக்கமாக இருந்தன. ஆனால் அவை போதுமானவை அல்ல என்பதால், துணைவிதிகளை தனியாக உருவாக்கலாம் என்று பேரவை முடிவு செய்தது. நீக்கப்பட்ட விதிக்கு நேராக - To be replaced by Election byelaws என்று குறிக்கப்பட்டது.  தேவையான துணைவிதிகளை செயற்குழு வகுத்து, பேரவையின் ஒப்புதலுக்கு வைக்க வேண்டும் என்று அமைப்பு விதி 21 கூறுகிறது. அதற்குப் பிறகு வந்த செயற்குழுக்கள் துணைவிதிகள் உருவாக்குவது பற்றி சிந்திக்கவே இல்லை.

1995இல் அமைப்புவிதிகள் திருத்தம் செய்யப்பட்டபோது அதற்கான குழுவில் இருந்த ஒருவர், பல ஆண்டுகள் ஆகியும் துணைவிதிகள் வகுக்கப்படவில்லை என்பதால் தனியொருவராக துணைவிதிகளை வகுத்து சங்கத்துக்கு அளித்தார். அவர் இதை அளித்து ஏழரை ஆண்டுகள் கழிந்து விட்டன. அதற்குப் பின் வந்த செயற்குழுக்கள் இதை கவனிக்கவே இல்லை. இவை பேரவைகளில் பரிசீலிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகளை எழாது. செயற்குழுக்கள் செயல்படாத குழுக்களாக இருந்ததால், பேரவையின் கவனத்துக்குக் கொண்டு வந்து உறுதியான நடவடிக்கைகளுக்கு வழிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சங்கத்தின் நலம் விரும்பிய மூத்த உறுப்பினர்கள் கீழ்க்கண்ட விளக்கத்துடன் ஒரு தீர்மானத்தை முன்வைத்தனர்.

தீர்மானத்திற்கான விளக்கம்
சங்கத்தின் ஒவ்வொரு தேர்தலின்போதும், அப்போதைய செயற்குழு மற்றும் தேர்தல் அதிகாரிகள் தேர்தலை சுமுகமாக நடத்துவது பற்றி  அவரவர் கருத்துப்படி நெறிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது, சம்பந்தப்பட்ட அனைவருடைய நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கும் ஒரு செயல். மேலும், சில சமயங்களில் தவறான அல்லது நடைமுறைக்கு ஒத்து வராத சில விதிகளையும் மேற்கண்டவர்கள் புகுத்தி பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டதையும் நாம் அறிவோம். சான்றாக, வாக்குச்சாவடிக்குள் குறிப்புகளை எடுத்துச் செல்லலாமா, தேர்தலில் பங்கேற்க அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டா, முன்மொழிதல்-வழிமொழிதல் பற்றிய கட்டுப்பாடுகள் போன்றவை கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இவற்றை எல்லாம் தவிர்த்து, தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை சீரமைக்கும் நோக்கத்தோடு ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு  சங்கத்தின் நாங்கள் தேர்தல் துணைவிதிகளின் வரைவை சங்கத்தின் மேலான கவனத்திற்கு அளித்திருந்தோம். இதுவரை அதுபற்றி எந்த செயற்குழுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழரை ..... முடிந்த நிலையில், நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு கீழ்க்கண்ட தீர்மான வரைவை பேரவையின் மேலான கவனத்துக்குக் கொண்டு வர விழைகிறோம்.

தீர்மானம் -
தேர்தல் நடத்துவதற்காக ஒருபடித்தான விதிமுறைகளை உருவாக்கி அவ்வப்போது பதவியில் இருக்கும் செயற்குழுக்கள் மற்றும் அவர்களால் நியமிக்கப்படும் தேர்தல் அதிகாரிகளின் தன்விருப்புரிமையை நெறிப்படுத்தும் வகையில், தேர்தல் துணைவிதிகளின் வரைவை ஆறு மாதத்திற்குள் சிறப்புப் பேரவையின்முன் வைக்க வேண்டும் என்று இந்தப் பேரவை பணிக்கிறது.

இதுதான் உறுப்பினர்கள் முன்வைத்த தீர்மானம்.

ஏழரை ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட பிறகும் தேர்தல் துணைவிதிகள் உருவாக்கப்படவில்லை. பேரவையில் விவாதித்து அப்படியே விட்டு விடுவதில் பயனில்லை. எனவே, அடுத்து வரும் செயற்குழு ஆறு மாதங்களுக்குள் துணை விதிகளை வகுத்து சிறப்புப் பேரவையைக் கூட்டி உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

மேற்கண்ட தீர்மானம் எந்த வேட்பாளருக்கும் ஆதரவானதல்ல, எதிரானதும் அல்ல, எவருக்கும் பொருள் லாபம் தருவதும் அல்ல, வாக்கு லாபம் தருவதும் அல்ல. இதன் நோக்கம் செயற்குழுவை கண்டிப்பதும் அல்ல, செயற்குழு உறுப்பினர்களை விமர்சனம் செய்வதும் அல்ல. பதினைந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. இனியாவது தேர்தல் துணைவிதிகளை உருவாக்குவோம் என்பதே நோக்கம்.

இந்த தீர்மானம் ஏற்கப்பட்டு துணைவிதிகள் உருவானால் --
முன்மொழிதல், வழிமொழிதல் பற்றிய சர்ச்சைகள் முடிவுக்கு வரும்
தேர்தல் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிகள் சங்கத்திடம் இருக்கும்
தேர்தல் பணிகளில் செயற்குழுவின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாகும்.
தேர்தல் அதிகாரிகள் தம் விருப்புரிமைப்படி செயல்படாமல், முறையாக செயல்படுவதற்கான வழி பிறக்கும்.
பொறுப்புக்காலம் முடிந்து வெளியேறும் செயற்குழுக்கள் அடுத்த செயற்குழுவுக்கு வேட்பாளர்களை ஆதரிக்கலாமா கூடாதா என்ற விவாதங்களுக்கு முடிவு கிடைக்கும்.
தேர்தலின்போது எழும் சர்ச்சைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் எடுக்கும் முடிவு விருப்பு-வெறுப்பு அடிப்படையிலானது அல்லது உள்நோக்கம் கொண்டது என்பன போன்ற ஐயமோ குற்றச்சாட்டோ எழுவதற்கு வாய்ப்பிருக்காது.

தேர்தல், வாக்குறுதிகள், வாக்குகள், வெற்றி, பதவி - இவற்றை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காமல் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் சங்கம், சங்க நலன், உறுப்பினர் நலன், உறுப்பினர் உரிமைகள் போன்ற விஷயங்களும் உண்டு என்பதை கணக்கில் கொண்டே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை வரைந்தவர்கள் சங்க அமைப்புவிதிகளை அறியாதவர்களும் அல்ல, சங்க வரலாறு தெரியாதவர்களும் அல்ல, கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்களும் அல்ல, நடைபெற இருக்கும் தேர்தலில் பங்கேற்பவர்களும் அல்ல. ஆனால், இந்தத் தீர்மானத்தையும் பேரவையின்முன் வைக்க மாட்டோம் என்று நிராகரித்துள்ளது செயற்குழு,

அவர்கள் இதை நிராகரிக்க முன்வைத்திருக்கும் காரணங்களைப் படித்தால், அவை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவைகளாக இருக்கும். சங்க அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.


முதல் காரணம் தீர்மானத்தின் ஆங்கில வடிவத்தைத் தரவில்லையாம்.

ஆஹா... தமிழறிந்த தமிழர்கள் மட்டுமே உறுப்பினராக இருக்கும் தமிழ்ச் சங்கத்தில் யாரும் தமிழில் தீர்மானத்தை வைக்க முடியாது என்பது இதுவரை நம் யாருக்குமே தெரியாமல் போய் விட்டதே....!? அப்படியானால் ஆங்கிலம் தெரியாத, தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் சங்கத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாதோ...!? ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக இருக்க முடியுமோ அல்லது ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டும்தான் கருத்துக்கூற முடியுமோ...!? அடடா... இது தெரியாமல் இத்தனை காலமாக தமிழர்களாகிய நாம் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து வருகிறோமோ...!? தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்; தமிழ்ப் பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும், நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம் அமையாது என்று பாடிய பாவேந்தருக்கு ஒரு கொட்டாவி அஞ்சலி செலுத்துவோம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்.

எமக்கு இன்னொரு சந்தேகமும் எழுகிறது. சங்க விதி 37, The proceedings of the meeting of the General Body and the Executive Committee shall ordinarily be conducted in Tamil எனக் கூறுகிறதே. ஒருவேளை இந்த விதி தவறானதோ...!? இந்த விதிகளை வகுத்த ஆன்றோர்கள் அறிவுகெட்டுப் போய் தமிழில்தான் விவாதங்களை நடத்த வேண்டும் என்று கூறி விட்டார்களோ.

குழப்பமாக இருக்கிறது ஐயா.

யாம் கொடுக்கிற கடிதம் எதற்கும் பதில் தருவதில்லை என்று தலைவரும் செயலரும் உறுதிமொழி எடுத்திருப்பது போலத் தெரிகிறது. அதனால் செயற்குழுவில் இருக்கும் ஆங்கில மேதாவிகளிடம் அல்லது அவர்களுக்கு ஆலோசனை கூறும் அறிவாளிகளிடம் கேட்டு யாரேனும் தெளிவுபடுத்தினால் நல்லது.

இரண்டாவது காரணம் - 18-12-2005இல் நடைபெற்ற 45ஆவது பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தீர்மானத்தை முன்வைப்பதற்கான துணைவிதி குறிப்பிடப்படவில்லையாம்.

அடேயப்பா.... எவ்வளவு புத்திசாலிகள் இந்த செயற்குழுவின் முக்கியஸ்தர்கள்.... தீர்மானத்தை நிராகரிக்க எவ்வளவு நுணுக்கமாக சட்ட விஷயங்களை அலசியிருக்கிறார்கள் . . .  என்று யாரும் நினைத்து விடாதீர்கள் நண்பர்களே.

முதலாவதாக, 18-12-2005இல் நடைபெற்றது 45ஆவது பேரவை அல்ல, 43ஆவது பேரவை. ஆனால் 18.12.2005 அன்று நடைபெற்ற பேரவையின் நடவடிக்கைக் குறிப்பிலோ, 45 ஆவது பேரவைக்கூட்ட நடவடிக்கைக் குறிப்பிலோ இந்தமாதிரி எந்த கட்டுப்பாடும் காணக்கிடைக்கவில்லை. எதோ ஒரு கூட்டத்தின் ஒலி நாடாவில் இருக்கிறது என்று ஒரு பெருமகனார் தெரிவித்தார். யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒலி நாடாவின் கருத்துக்களுக்கேற்ப தீர்மான வரைவுகளை அனுப்பாதது நமது தவறுதான் இல்லையா... !?

சரி, தீர்மானங்கள் ஆங்கிலத்தில் தரப்படவில்லை, துணைவிதிகள் குறிப்பிடப்படவில்லை என்ற இரு குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்வோம். இந்தச் செயற்குழு ஒரு ஆண்டறிக்கை அனுப்பி இருக்கிறதே - அது என்ன ஆங்கிலமா அல்லது தமிழா...!?

நான் தமிழ் என்றுதான் எண்ணினேன். இவர்கள் கணக்கில் அது ஆங்கிலமோ....!? அப்படியானால் ஆங்கிலத்தைத்தான் நான் இத்தனை காலமும் தமிழ் என்று எண்ணி வந்திருக்கிறேனோ...!?

சரி போகட்டும். இவர்கள் முன்வைத்திருக்கிற ஆண்டறிக்கை மற்றும் செயலறிக்கைகளில் எந்த துணைவிதியின் கீழ் இவை தரப்படுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்களா...!? அல்லது எந்த அமைப்பு விதியின் கீழ் பேரவை கூட்டப்படவிருக்கிறது என்றாவது குறிப்பிட்டிருக்கிறார்களா? என் கண்களுக்கு அந்தத் துணைவிதிகள் ஏதும் தென்படவில்லை. ஒருவேளை செயற்குழு உறுப்பினர்களுக்கும் அவர்களது ஆலோசகர்களுக்கும் மட்டுமே தெரியக்கூடிய வகையில் இரகசிய மையில் துணைவிதிகள் அச்சாகி உள்ளதோ....!?

உங்களில் யாருக்கேனும் இந்தத் துணைவிதி தென்பட்டால் தயவுசெய்து தெரிவியுங்கள் நண்பர்களே...

இந்தத் தீர்மானத்தைப் பேரவை முன் வைக்க மறுப்பதற்கான மூன்றாவது காரணம்: இது அமைப்பு விதி 45க்கு ஏற்ப இல்லையாம். விதி 45 கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது:

Additions, etc., to the Rules:
1)      Any additions, alterations or omissions in these Rules and Regulations shall be effected by a resolution of the members of the Sangam present at duly convened General Body Meeting and by a resolution passed by two thirds of the total members of the Sangam present at the meeting.
2)      The draft of the proposed additions, alterations or omissions shall be circulated at least 21 days prior to the meeting to all members of the Sangam.
3)       Such additions, alterations or omissions shall come into force immediately after the confirmation of the minutes of the meeting referred to sub-rule (1) above in a subsequent General Body Meeting which can be held on the same day by 2/3rd majority of the members present at the meeting.

எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின்படி, விதி 45, அமைப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவருவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது. சான்றாக, அமைப்பு விதிகளின்படி செயற்குழுவின் ஆட்சிக்காலம் 2 ஆண்டுகள் - இதைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டுமாயானால் அமைப்பு விதிகளில் மாற்றம் செய்துதான் இதைக் கொண்டுவர இயலும், அதற்கான முயற்சி விதி 45க்கு உட்பட்டதாக இருக்கும். நாம் மேலே கண்ட தனி நபர் தீர்மான வரைவு அமைப்பு விதிகளில் எந்த மாற்றத்தையும் கோரவில்லை. ஆகவே இதற்கும் அமைப்பு விதி 45க்கும் இடையே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இருப்பதைப்போன்ற நெருங்கிய தொடர்பு உண்டு.

சங்க விதிகளுக்கு மாறாக இந்தத் தீர்மானங்களை முன்வைக்க மறுத்த இன்றைய செயற்குழுவின் முக்கியஸ்தர்கள் உண்மையிலேயே விவரம் அறிந்தவர்களாக இருந்திருந்தால், ஆங்கிலம் - தமிழ் இரண்டும் அறிந்தவர்களாக இருந்திருந்தால், சங்க விதிகளைப் படித்தவர்களாக இருந்திருந்தால், அல்லது நடுநிலையாளர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தால், சங்க நலன் கருதுபவர்களாக இருந்திருந்தால், சங்கச் செயற்குழுவின் செயல்பாடுகள் உறுப்பினர்களுக்கு ஒளிவுமறைவு இன்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்திருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்?

இந்தத் தீர்மானம் மிகவும் அருமையானது, இதை தனிநபர் தீர்மானமாக இல்லாமல் செயற்குழுவின் தீர்மானமாக முன் வைக்கிறோம் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? அப்படிச் செய்திருந்தால் அவர்களுக்கல்லவா பெருமை சேர்ந்திருக்கும்! அந்தப் பெருமை வேண்டாம் என்ற அவர்களது தியாகத்துக்குத் தலைவணங்குவோம்

இந்தச் செயற்குழுவின் முக்கியஸ்தர்கள் பலரும் பலமுறை பதவிகளை வகித்தவர்கள். ஆனால் இன்றும்கூட சங்க விதிகள் என்ன என்பதை தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவர்கள். தம்மைப்போன்ற ஆட்கள்தான் சங்கத்தில் அடுத்து பொறுப்புக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள். மீண்டும் 2013 அல்லது 2014 தேர்தலில் பொறுப்புக்கு வந்து சங்கவிதிகள் பற்றிய தமது ஆய்வைத் தொடர்வார்களோ?

ஆகவே நண்பர்களே, இந்தத் தேர்தலில் நீங்கள் எடுக்கும் முடிவு, சங்க எதிர்காலத்துக்கான முடிவு.

சங்க விதிகளை அறிந்தோ அறியாமலோ துச்சமாக மதித்து, மிதித்து, ஆணவத்துடன் செயல்படுவோர் சிலர் முன்வைக்கும் வேட்பாளர்களைத் தோற்கடித்து பதிலடி கொடுங்கள். சங்கச் சீரமைப்பு அணிக்கு வெற்றி தேடித் தாருங்கள்.

வாக்களித்து விட்டுச் சென்று விடாமல் பேரவையில் உங்கள் கருத்தை வலுவாக வெளிப்படுத்துங்கள். சங்கத்தைக் காக்க உதவுங்கள்.

அடுத்த பதிவு விரைவில் வெளியாகும், வலைப்பூவை தொடர்ந்து பாருங்கள்.

No comments: