Saturday 24 September 2011

விஷக்கடிகளுக்கு முறிவு


திரு கி. பென்னேஸ்வரன் அவர்கள் தனது வலைதளத்தில் நமது வலைப்பூ குறித்து எழுதியிருக்கிறார். இதில் பல விஷயங்களை அவரே ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுவினர்மர்மமான முறையில் இரா. முகுந்தன் மற்றும் கேவிகே பெருமாள் ஆகியோரின் இடைநீக்கத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள் என்றால், செயற்குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் போர்க்கொடி அல்லவா தூக்கியிருக்க வேண்டும்?! இந்த செயற்குழு முக்கியஸ்தர்களின் ஆதரவு எனக்கு வேண்டாம் என்றல்லவா இவர் கூறியிருக்க வேண்டும்?! தேவைக்கேற்ப அடர்த்தியான மௌனம் காப்பதும், தேவைக்கேற்ப போற்றிப் புகழ்வதும்தானே இவருக்கு வழக்கம்?!

இவரது அணியில் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்கள் என்றால், திரு பார்த்தசாரதியின் பிரசுரம் எப்படி வெளியானது... அணியில் அவர் தனிஆவர்த்தனம் வாசிக்கத் துவங்கி விட்டாரா...?!

இவர் குறிப்பிட்டுள்ள இந்த மொட்டை வலைப்பூ -  சங்கச்சீரமைப்பு அணியின் வலைப்பூ என்றுதான் பெயர் தாங்கி வருகிறது. சங்கச் சீரமைப்பு அணியின் வேட்பாளர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும் - கூட்டு முயற்சியில் வெளியாகும் வலைப்பூவில் தனிநபர்கள் முக்கியமல்ல. பிரசுரங்கள் வெளியாகும்போது பெயர்களுடன்தான் வெளிவரும், கவலை வேண்டாம்.

இந்த வலைப்பூ அமைதியான முகத்தைக்காட்டி முகிழ்த்தது என்று இவர் குறிப்பிட்டதற்கு நன்றி. எதிர்மறையான பிரச்சாரமாக நேற்று வரை எதுவும் இதில் எழுதப்படவில்லை என்பதை அவரும் அறிந்திருப்பார். அவரது வலதுகரமான திரு பார்த்தசாரதி வெளியிட்ட பிரச்சாரத்திற்குப் பிறகுதானே பதிலடி கொடுக்கும் தேவை எமக்கு வந்தது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள இவர் மறுப்பது ஏன்? தனது அணியின் பார்த்தசாரதியை அல்லவா அவர் முதலில் குற்றம் சாட்ட வேண்டும்?!

நமது வலைப்பூவில் வெளிவந்த பதிவுகளைப் பற்றிப் பேசுவதானால் அதில் உள்ள விஷயங்களைப் பற்றித்தானே கருத்துக்கூற வேண்டும்... அரைகுறை அறிவுடன் அபத்தமாக எழுதப்பட்டுள்ள பதிவுகள் என்று அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு இவர் அறிவுஜீவித்தனமாகப் பதிலளித்திருக்கலாமே... மொத்தத்தில் இவர் ஏன் எல்லாரையும் எல்லாவற்றையும் மதிப்பீடு செய்யும் நீதிபதியாகத் தன்னை நியமித்துக் கொள்ளவேண்டும்? மாற்றுக் கருத்துகள் தெரிவிப்பவர்களின் உள்ளக்கிடக்கையையும் அவர்களை உந்தும் சக்திகளையும் ஐயம் திரிபறத் தெரிந்தவர் என்று தம்மை விளம்பரப்படுத்திக்கொள்கிறார்?   

தேர்தல் நேரத்தில் பரபரப்பினை உண்டாக்குவது இவருக்குத்தானே வழக்கம். 2006 தேர்தலில் முகுந்தனை வானளாவப் புகழ்ந்து இவர் வெளியிட்ட அறிக்கையை அவ்வளவு சுலபமாக மறக்க முடியுமா!

வலைப்பதிவில் நாம் ஏற்கெனவே வெளியிட்ட உறுப்பினர் தீர்மானங்கள் சங்கத்தின் நலன் கருதி வைக்கப்பட்டவை என்பதிலும், தேவையானவை என்பதிலும் இவருக்கு மாற்றுக் கருத்து இல்லையாம். அப்படியானால் செயற்குழு இதை பேரவைமுன் வைக்க மறுத்தது தவறு என்று வெளிப்படையாக எழுத வேண்டியதுதானே?! ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விட்டது என்று எதற்கு மழுப்ப வேண்டும்? அந்தக் காரணங்கள் சரியா - தவறா என்று சொல்லக்கூடாதா?! மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் புறக்கணிக்கப்பட்ட உணர்வாலும் காழ்ப்புணர்ச்சியினாலும் செயல்படுகிறார்கள் என்றெல்லாம் ஆய்ந்து ஆய்ந்து காரணங்களைக் கண்டுபிடித்த இவருக்கு செயற்குழு எந்தக் காரணத்தினால் மறுத்து விட்டது என்று கண்டுபிடிக்க அல்லது யூகிக்க முடியவில்லையா? 

மேலே அரைகுறை அறிவு, அபத்தம் என்று இவர் சுட்டிக்காட்டினாரே, அவை இந்தத் தீர்மானங்கள்தான். இவர் மாற்றுக்கருத்து இல்லாமல் ஒப்புக்கொள்கிறார் என்றால் அபத்தம் என்று ஏன் கூற வேண்டும்?! பதிவில் முன்வைத்துள்ள கருத்துகள் சரியா தவறா என்பதைப் பற்றி எழுதாமல் எழுதியவர்களுக்கு என்னென்ன மனநிலை என்று எதற்காக ஆராய வேண்டும்?!

வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் குளறுபடிகள் விஷயங்கள் உறுப்பினர்களுக்குத் தெரியும், பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டவர்களுக்குத் தெரியும். இவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

அது சரி, நடப்புச் செயற்குழுவுக்கு இப்படியா வக்காலத்து வாங்க வேண்டும்? அஞ்சல்களுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த பட்டியலை தவறுதலாக நகல் செய்து முட்டாள்தனமாகக் கொடுத்து விட்டதாம் இந்த செயற்குழு. அப்பாடா... இதைத்தானே நாங்கள் நாகரிகமாக கூறிக்கொண்டிருந்தோம்... இவர் தனக்கே உரிய நாகரிகத்துடன் முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார்.

அது சரி, சங்கத்தில் உறுப்பினர் பதிவேடு என்பது எப்போதும் இருக்க வேண்டிய ஒரு ஆவணம். உறுப்பினர் பட்டியலும் அப்படித்தான். இது தெரியாமல் செயலராக வந்து இவர் என்ன செய்யப்போகிறார் என்று நாம் கேட்க மாட்டோம். ஆனால் அஞ்சலுக்கு வைத்திருந்த பட்டியலை தவறுதலாகக் கொடுத்து விட்டார்கள் என்று செயற்குழுவினர் இதுவரை வெளிப்படுத்தாத ஒரு விளக்கத்தை வழங்கி வக்காலத்து வாங்கி முழுப்பூசணிக்காயை மறைப்பது எந்த வகையில் நியாயம்?!

டி.என். சேஷன், நீதிபதி மோகன், ஏஆர் லட்சுமணன் இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி, மணியன், இந்திராணி மணியன், விட்டல்... இவர்களைப்போன்ற பெரியவர்கள் உள்பட 500 பேருக்கு சங்கத்தின் அஞ்சல்கள் பெறும் தகுதி கிடையாதா?! எதனால் அவர்கள் பெயர்கள் அஞ்சல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன என்றும் கூறியிருக்கலாமே?!

தமிழ்ச் சங்கத்துக்கு உண்மையிலேயே உதவ நினைத்த பார்த்தசாரதி மற்றும் துரை ஆகியோரின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதுதானே இந்தப் பட்டியல்? தில்லியிலேயே வசித்துக் கொண்டிருக்கிற பலரின் பெயர்கள் பட்டியலில் இல்லாமல் ஆக்கியவர்கள் இந்த உதவி செய்தவர்கள்தானே?! இவருக்குக் குருவாக இருக்கிற திரு சௌந்திரராஜன் தில்லியில் இல்லாவிட்டாலும் பெயர் மட்டும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதே அது எப்படி?! இது உதவியா உபத்திரவமா?! பாவம் செயற்குழுவினர்... அவர்களே கொஞ்சம் கஷ்டப்பட்டு பட்டியல் தயாரித்திருந்தால் ஓரளவுக்காவது சரியான பட்டியலை தயாரித்திருக்கலாம். உதவி செய்ய வந்த பெரியவர்கள் இப்படி உளைச்சலில் ஆழ்த்தலாமா?!

பார்த்தசாரதி சங்கத்திற்கு உதவி செய்யச் சென்றார் என்று இவரே ஒப்புக் கொள்கிறார். திரு துரை அவர்களும் அதில் தீவிரமாக இருந்ததை இவர் சுட்டிக்காட்டவில்லை. உறுப்பினர் பட்டியல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியில் ஈடுபடலாமா?! அவர்களை தனது அணியில் இவர் சேர்க்கலாமா?! வலைப்பூவில் நேர்மையைப் பற்றிய தம்பட்டத்துக்குக் குறைவில்லை என்று நம்மைக் குற்றம் சாட்டுகிறவர், தார்மீக அடிப்படையில் பார்த்தசாரதியையும் துரையையும் தன் அணியில் சேர்த்திருக்கவே கூடாதே?!

கிருஷ்ணமணியின் நேர்காணலை வலைப்பூவில் வெளியிட்டதுதான் இவரது கோபத்துக்குக் காரணம். புரிகிறது. 2006 தேர்தலில் கிருஷ்ணமணி அவர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்கும் நோக்கத்துடன் பேட்டியை வெளியிட்டால் அது நியாயம். அப்போது கிருஷ்ணமணி உத்தமர். இப்போது இவருக்கு எதிராகப் போட்டியிட்டால் இவரே வெளியிட்ட பேட்டி முழுக்கப் பொய்யாகி விடும்.

இப்படியே பார்த்தால், 2006 தேர்தலில் முகுந்தனைப் பாராட்டி ஒரு பணிவான வேண்டுகோள் விடுத்தாரே... அதிலிருந்து ஒரு பத்தி இதோ -
இன்று முகுந்தனுக்கு எதிராக நீளும் பல கரங்கள் அவரிடம் பல நிலைகளில் பல இக்கட்டான நேரங்களில் உதவிகளைப் பெற்றுச்சென்ற கரங்கள்தான். பதவி ஆசையும் தேர்தல் நேர அணிமாறல்களும் பலரை நன்றி மறக்கச் செய்துள்ளன என்பது மிகவும் வேதனையான விஷயம்.
(முழு வேண்டுகோளையும் படிக்க விரும்புவோர் கீழே உள்ள படங்களைப் பெரிதுபடித்துவிட்டுத் தொடரலாம்)



ஒரு விஷயத்தைத் இவர் தெளிவுபடுத்தட்டும் - இவர் ஒருவரை நேற்று செயல்வீரர் என்று சொன்னால் அந்த நபரை செயல்வீரர் என்று நாமெல்லாம் நம்ப வேண்டும். இன்று அதே நபரை சீரழிவுக்காரர் என்று சொன்னாலும் நாம் அப்படியே நம்ப வேண்டும். அப்படி நாம் குருட்டுத்தனமாக நம்பாமல் கேள்வி கேட்டால் நாம் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்... நல்ல வாதம்தான் இது!

2006இல் உண்மையான செயல்திறனும் சாதிக்கும் மனோபாவமும் மனத்திடமும் உள்ளவராக இருந்த முகுந்தன், இரண்டே ஆண்டுகளில் அந்த திறமைகளையும் மனத்திடத்தையும் இழந்து விட்டதற்கு யார் காரணம்... அந்த இரண்டு ஆண்டுகளும் கூடவே இருந்தது இவர் அல்லவா?!

கிருஷ்ணமணி அந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்ச் சங்கத்தை தவறாக வழிநடத்தினார் என்று கடிதம் எழுதியதாகக் கூறுகிற இவர், 2008 மத்தி வரை அவர்களைப் போற்றிக்கொண்டுதானே இருந்தார்? 2008 மத்தியில் முகுந்தனுக்கு சிலைகாத்த செம்மல் பட்டம் வழங்கியதாக வடக்கு வாசலில் எழுதினாரே... 2008 மத்தியில் கிருஷ்ணமணிக்கு ஒரு விருது கிடைத்ததற்குப் பாராட்டி மகிழ்ந்தாரே...

இதிலிருந்து தெரிவது என்ன... அந்த இரண்டு ஆண்டுகளில் கிருஷ்ணமணியும் முகுந்தனும் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். உதவி செய்தது வரை அவர்கள் உத்தமர்கள். 2008 மத்தியிலிருந்து ஏதோ காரணங்களுக்காக அவர்களின் உத்தமர் தகுதிகளை இவர் பறித்து விட்டார். அவ்வளவுதான், யாரும் கேட்க முடியாது... கேட்டால் நாம் புறக்கணிக்கப்பட்டவர்கள்...!

சங்க சீரமைப்பு அணியின் தளபதி, தான் பதவி வகித்த காலங்களில் என்ன சாதித்து விட்டார் என்று கேட்டிருக்கிறார் இவர். நல்ல கேள்வி. அந்தத் தளபதி பதவி வகித்த காலத்தில் கடைசி ஆறு மாதங்கள் தவிர, மீதிக்காலம் முழுவதும் ஆலோசனைகள் கூறியதும் துணையாக இருந்ததும், போற்றிப் புகழ்ந்ததும், இவர்தானே.  அதனால்தானே அவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் போனது?! அதனால்தான் அந்தத் தளபதிகள் அரைகுறை அறிவுகொண்டு அபத்தமாக எழுதுவோரின் ஆலோசனைகளே போதும் என்று முடிவு செய்து விட்டார்கள் !.

அன்று மட்டுமா... இன்றைய செயற்குழுவுக்கும் அற்புதமான ஆலோசனைகளை அளித்து வருபவர்கள் இவரும் இவரது அன்புக்குரிய பெரியவர், சட்டஞானம் மிக்க திரு பார்த்தசாரதியும் அல்லவா! இவர்களின் ஆலோசனைகளால்  தமிழ்ச் சங்கம் நாளொரு அறிவிக்கை பொழுதொரு உறுப்பினர் பட்டியல் என்று அசடு வழிந்துகொண்டிருக்கிறது. தனி நபர் தீர்மானங்களை ஆழ்ந்து ஆய்ந்து ஆணித்தரமான காரணங்களோடு நிராகரித்துப் பெருமை தேடிக்கொண்டு இவராலும் பாராட்டப்படுகிறது

2004ல் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தலைவராகிய திரு சௌந்தர்ராஜன், 2006ல் திரு கிருஷ்ணமணி, முகுந்தன் உள்ளிட்ட முழு செயற்குழு, 2009ல் திரு கிருஷ்ண மூர்த்தி, பெருமாள், சத்திய மூர்த்தி பால மூர்த்தி, திருமதி இந்து பாலா உள்ளிட்ட பலர் - இப்படி ஒவ்வொருமுறையும் யாருக்காகவாவது வாக்குக் கேட்டு இவர் வருகிறார். அவர்களது பதவிக்காலம் முடியும் வேளையில் தான் தவறிழைத்து விட்டதாக பகிரங்கப் படுத்துகிறார். 

இன்னும் ஓராண்டு அல்லது ஈராண்டுகள் கழித்து இந்த செயற்குழுவினரையும் தாக்கி, இவர்களுக்கு ஆதரவளித்ததற்காக பாவமன்னிப்புக் கேட்டு இவர் எழுதுவார்.  அதையும் நாம் நம்ப வேண்டும்.

இன்னும் ஒரு விஷயம் - இன்று இவரது அணியில் இருப்பவர்களைப் பற்றிக்கூட நாளை இவரே தூற்றக்கூடும். அதைத் தாங்கிக்கொள்ள அவர்கள் இப்போதிருந்தே தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளட்டும்...

இறுதியாக ஒரு சந்தேகம் : பல இடங்களில் இவர் யாரைக் குற்றம்சொல்கிறார் என்று தெரியவில்லை.
தேர்தல் அல்லது பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் போது மட்டுமே சில தலைகள் சங்கத்தில் தென்படும்.
இவர்கள் முன்வைத்த வேட்பாளர்கள் செயற்குழுவுக்குப் பெரும் தலைவலியாக இருப்பார்கள். 
அந்த சதிக்குழுவுக்குத் தலைமை வகிக்கும் இந்தக் காகிதப் புலிகள் பொதுக்குழுவில் ஏக ரகளை செய்வார்கள். 
தங்களின் சட்ட ஞானத்தை முன்வைத்து காகிதப் புலிகளாக கர்ஜிப்பார்கள்.
பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு சுத்தமாக காணாமல் போய்விடுவார்கள். 
என்றெல்லாம் இவர் யாரை குற்றம் சாட்டுகிறார் என்று தெளிவாகத் தெரிவிக்காதவரை யாரும் இதற்கு மறுப்புக்கூறப் போவதில்லை. நமக்குத் தெரிந்தவரை இந்த வர்ணனைக்குப் பொருத்தமாக எவரையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

இப்படிப்பட்ட, முகம்தெரியாத, முகவரி இல்லாத இவர்களின் நிழல்களுடன் மோதி, வெற்றிவீரராகத் தோளையும் நெஞ்சையும் நிமிர்த்தி எக்காளமிடுவதை இதற்கு முன்பும் கண்டிருக்கிறோம்... இப்போதும் பார்க்கிறோம்....




1 comment:

pkanniyappan said...

Can Mr. Hariharan throw some light on the total number of members (in all categories) available as on date in Delhi Tamil Sangam vis-a-vis the total Tamil population in Delhi? What is the percentage? Why Tamil Sangam is always denying the rightful membership to the eligible Tamils, even after collecting the prescribed fee? By telling one or the other reason the membership is always denied. Why this fear? A day should come, as in the Delhi Tamil Schools, wherein all the Tamils should get their due membership within a reasonable period of say, one month. Else their membership fees should be returned promptly.
Whether the present Sanga Seeramaippu ANi can ensure this?
P. KANNIYAPPAN, Patron Member No. P-1116.(From Gurgaon) 24-9-2011. pkanniyappan@yahoo.com, pkanniyappan@gmail.com